முகத்திரை (நிகாப்) ஓர் இஸ்லாமிய சட்டப் பார்வை

முகத்திரை குறித்து இஸ்லாமிய சட்ட அறிஞர்களுக்கு மத்தியில் உடண்பாடானதொரு கருத்து இல்லை. அதில் மிக நீண்ட வாதப்பிரதி வாதங்கள் ஆரம்ப காலம் தொட்டே இருந்து வருகின்றது.

ஒரு சாரார் முகம், மனிக்கட்டு வரயையான கை உட்பட பெண் முழுமையாக அவ்ரத்தாகும், ஆகவே விதிவிலக்கின்றி முழுமையாக அவள் தன்னை மறைப்பது வாஜிபாகும் எனக் கருதுகின்றனர்.

அடுத்த பிரிவினர் முகம், மணிக்கட்டு வரையான கைகள் விதிவிலக்கானது என கருதுகின்றனர்.

இரு தரப்பினரும் தமது ஆதாரங்களை பின்வருமாறு முன்வைக்கின்றனர்:

முகம், மனிக்கட்டு என்பன அவ்ரத் அல்ல எனக் கருதுவோர் இன்னுமொரு விடயத்திலும் கருத்து முரண்பட்டுள்ளனர், அதாவது அவை இரண்டும் பொதுவாக பார்ப்பதற்கு ஆகுமானவையா அல்லது வரையறைகள் இருக்கின்றனவா என்பதிலும் கருத்து முரண்பாடு நிலவுகின்றது.

இதில் ஒரு பிரிவினர், பித்னாவுக்கு அஞ்சும் நிலை ஏற்படாத வரை முகம், மனிக்கட்டு ஆகியன பார்ப்பதற்கு ஆகுமாகும் எனவும், அடுத்த பிரிவினர், பித்னாவுக்கு அஞ்சாவிட்டாலும் பொதுவாக பார்க்கக்கூடாது, தேவைக்கு மாத்திரமே பார்க்க வேண்டும் எனக் கருதுகின்றனர், இதுவே ஓரளவு பலமான கருத்தாகும். பித்னா நிகழும் என அஞ்சும் நிலயில் பார்ப்பது ஹராமாகும் என்பது ஏகோபித்த கருத்தாகும்.

முகத்திரை வாஜிபானது என்பது ஹம்பலி மத்ஹபின் சில இமாம்களின் பலமான கருத்து. இமாம் இப்னு குதாமா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: “எமது சில இமாம்கள் முகம், இருகைகள் ஆகியன அவ்ரத் எனக் கருதுகின்றனர்”(முக்னி).

இதற்கவர்கள் பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கின்றனர்:

1. “يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّـهُ غَفُورًا رَّحِيمًا” (سورة الأحزاب: 59).
“நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் பிள்ளைகளுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக, அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.” (ஸூறா அல் அஹ்ஸாப்: 59).

இங்கு “ஜலாபீப்” என்பது உச்சந்தலை முதல் முகம் உட்பட கால் வரை மறைக்கும் ஆடை என விளக்கமளித்தனர். கண்களில் ஒன்றை மாத்திரம் பார்ப்பதற்காக திறக்க முடியும் என சலுகை வழங்கினர். இது இப்னு அப்பாஸ் (றழி) அவர்களின் விளக்கமாகும்.

2.
“وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا
ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ” (سورة الأحزاب: 31).

“இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதில் (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்” (ஸூறா அல் அஹ்ஸாப்: 31).

‘தங்கள் அழகலங்காரத்தை அதில் (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர’ என்பது வெளியில் தெரியும் ஆடைகயைக் குறிக்கும், முகம், கைகள் உட்பட அனைத்து உடலும் மறைக்கப்பட வேண்டும் என விளக்கமளித்தனர்.

3.
وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِن وَرَاءِ حِجَابٍ ۚ ذَٰلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ
وَقُلُوبِهِنَّ ﴿ سورة الأحزاب:53﴾
“நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளைக் கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களைளயும் தூய்மையாக்கி வைக்கும்” (ஸூறா அல் அஹ்ஸாப்: 53).

இது உம்முஹாதுல் முஃமினீன்களை நோக்கி பேசினாலும் அவர்களுக்கு மட்டுமுரியதல்ல, ஏனைய முஃமினான பெண்களுக்குமாகும். அவர்களும் திரைக்குப் பின்னாலிருந்தே ஆண்களிடம் எதையாவது கேட்க வேண்டும். ஆகவே முகம் கை உட்பட அணைத்தும் மறைக்கப்பட வேண்டுமென்பதை இது காட்டுகின்றது.

4.
“مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ” (سورة الأحزاب: 31).
‘இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்” (ஸூறா அல் அஹ்ஸாப்: 31).

இந்த வசனம் இறங்கிய போது பெண்கள் தமது ஆடைகளின் கீழ்ப்ப்குதியிக் கிழித்து முந்தானிக்ளை (கிமார்) அமைத்துக் கொண்டனர், கிமார் என்பதற்கு முகத்திரை என விளக்கமளித்தனர், இதனை இமாம் இப்னு ஹஜர் குறிப்பிடுகின்றார்கள்.

5. திர்மிதியில் வரும் ஹதீஸில், இறைதூதர் (ஸல்) அவர்கள் நவின்றதாக இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

” المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان ”

‘பெண் அவ்ரத்தாகும், அவள் வெளியேறினால், ஷைத்தான் அவளை நெருங்குகின்றான்” (திர்மிதி)

இதில் பெண் அவ்ரத்தானவள் என்பது முகம், கை உட்பட அனைத்தையும் உள்ளடக்கும் என விளக்கமளித்தனர்.

6. புஹாரியில் வரும் ஹதீஸில் இப்னு உமர் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு மனிதர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே இஹ்ராமில் எந்த ஆடையை அணியுமாறு எமக்கு கட்டளையிடுகின்றீர்கள்? என வினவினார், அதற்கு நபி (ஸல்) அவர்கள் ……..பெண்கள் முகத்திரை அணிய வேண்டாம்..” (புஹாரி).

இதில் இஹ்ராம் அணியும் பெண் விஷேடமாக முகத்திரை அணியக் கூடாது என ஈண்டு குறிப்பிட்டதானது ஏனைய நேரங்களில் அணிய வேண்டும் என்பதைக் காட்டுகின்றது.

7. ஆயிஷா (றழி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: நாம் இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையில் றஸூலுல்லாஹ்வுடன் இருப்போம், அப்போது பயணிப்போர் எம்மைக் கடந்து செல்வார்கள், எமக்கு நேராக அவர்கள் வரும் போது எங்களில் ஒவ்வொருவரும் தமது தலையின் மேலிருந்து முகத்திரையை எடுத்து முகத்தை மறைப்பார்கள், அவர்கள் எம்மைக் கடந்து சென்று விட்டால் நாம் முகத்தைத் திறப்போம்”. (அஹ்மத்).

இவை போன்ற இன்னும் பல ஹதீஸ்களையும் ஆதாரமாக குறிப்பிடுகின்றனர். அவற்றில் எதுவும் நேரடியாகவும் திட்டவட்டமாக முகம், கை என்பன அவ்ரத் எனக் குறிப்பிடப்படவில்லை. மாறாக வழங்கப்படும் விளக்கங்களினடிப்படையிலேயே முகம் மற்றும் கைகள் என்பன அவ்ரத் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டாவது சாரார் முகம், மணிக்கட்டு தவிர்ந்த பெண்களின் ஏனைய உடல் முழுமையாக அவ்ரத்தானதாகும் எனக் கருதுகின்றனர். இது ஆயிஷா (றழி), இப்னு அப்பாஸ், இப்னு உமர் போன்ற ஸஹாபாக்களினதும், ஹனபி, மாலிகி, ஷாபி மத்ஹபினரினர் உள்ளிட்ட பெரும்பாலான சட்ட அறிஞர்களின் கருத்துமாகும். இன்னும் இமாம் இப்னு அப்துல் பர், அல் காஸானி (ஹனபி), இப்னு குதாமா (ஹம்பலி), அல் தர்தயிர் (மாலிகி) ஸகரியா அல் அன்ஸாரி (ஷாபி) போன்ற இமாம்கள் இக்கருத்தை பலப்படுத்தி எழுதியிருக்கின்றனர்.

முகத்தைத் திறப்பதனால் “பித்னா” வுக்கு உட்படும் சூழல் இருப்பின் அதனை மறைக்க வேண்டும் என்பதும் இவர்களின் கருத்தாகும்.

பெண்களின் முகம் மற்றும் மனிக்கட்டு வரையான கைகள் அவ்ரத் அல்ல என்பதற்கு பின்வாரும் ஆதாரங்களை முன்வைக்கின்றனர்:
1. ஸூறா அல் நூர்: 31,

وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ﴿سورة النور: 31﴾
“இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதில் (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்” (ஸூறா அல் நூர்: 31).

இதில் “(சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர” என்பது முகம், மணிக்கட்டு வரையுமான கைகள் என விளக்கமளித்தனர். பைஹ்கியில் வருகின்ற அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்கள்.

2. ஸூறா அல் நூர்: 30

قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّـهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ ﴿سورة النور: 30﴾
“(நபியே!) முஃமின்களான ஆண்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.” (ஸூறா அல் நூர்: 30)

ஆண்கள் பார்வையை தாழ்த்த வேண்டும் என இந்த வசனம் குறிப்பிடுகின்றது, பெண்களின் முகம் மூடியிருப்பின் எதனை விட்டும் பார்வையைத் தாழ்த்துவது என்ற கேள்வி எழுகின்றது. பெண்களின் முகத்தை பார்க்கும் போது அது அழகாக தென்படும் போது அதனைத்தாழ்த்த வேண்டும் என்பதே இதன் பொருள் என்றனர்.

அதனால்தான் நபி (ஸல்) அலி (றழி) அவர்களைப்பார்த்து; அலியே! ஒரு தாடவை பார்த்தால் அதனைத்தொடர்ந்து மீண்டும் பார்க்காதே! முதல் பார்வை உனக்குரியதாகும், அடுத்தவை உனக்குரியதல்ல” எனக் குறிப்பிட்டார்கள்.

3. முஸ்லிமில் வரும் ஆயிஷா (றழி) அவர்களின் அறிவிப்பில் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்: “முஃமினான பெண்கள் தமது தலைகளை மறைத்த நிலையில் இறைதூதர் (ஸல்) அவர்களுடன் பஜ்ர் தொழுகையில் கலந்து கொண்டிருந்தனர். பின்னர் தொழுகை முடிந்தபோது தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்வார்கள், அதிகாலை இருளின் காரணமாக அவர்கள் அறியப்படமாட்டார்கள்”. (முஸ்லிம்).

காதிகாலை இருளின் கரணமாகவே அவர்கள் அறியப்படவில்லை, முகத்தை மூடியிருந்ததன் காரணமாக அல்ல, முகத்தை மூடியிருந்தால் இப்படிக்குறிப்பிட வேண்டிய அவசியம் இருக்காது.

4. முஸ்லிமில் வரும் அறிவிப்பில் ஜாபிர் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்தில் பெண்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அங்கு ஆண்களும் பெண்களும் இருந்தனர். அதில்: (பெண்களே!) ஸதகா செய்யுங்கள், உங்களில் அதிகமானோர் நரகத்தின் எரிபொருளாகும்” என்றார்கள். அதற்கு அங்கு பெண்கள் மத்தியில் அமர்ந்திருந்த கன்னம் சிவந்திருந்த ஒரு பெண்: ஏன் நாம் நீங்கள் வர்ணித்தது போன்று இருக்க வேண்டும்? என வினவ, நபி (ஸல்) அவர்கள்: கனவரின் உரிமைகளை மறுக்கின்றீர்கள், உங்களுக்காக செய்யப்படுபவற்றை நன்றியுணர்வின்றி, மறுதலித்து முறைப்படுவதை கைகொண்டிருக்கின்றீர்கள்” என நவின்றார்கள்.
இதன் அறிவிப்பாளர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: அவர்கள் தமது ஆபரணங்களில் இருந்து ஸதகா செய்தனர்.

இங்கு கேள்வி என்னவென்றால், கேள்வி எழுப்பிய பெண் முகத்தை மூடியிருப்பின் அப்பெண்ணின் கன்னங்கள் சிவந்தது என எப்படி ஹதீஸ் அறிவிப்பாளர் கண்டார்? முகம் திறந்து இருந்தமையே அதற்குக் காரணமாகும்.
மற்றுமொரு அறிவிப்பில்: அவர்கள் நகைகளை பிலால் (றழி) விரித்திருந்த ஆடையில் போடும் போது அவர்களில் கைகளக் கண்டேன் என அறிவிபாளர் குறிப்பிடுகின்றார்.
கைகளும் அவ்ரத் அல்ல என்பதைக் காட்டுகின்றது.

5. பெண்கள் இஹ்ராம் அணியும் போது முகத்திரை அணிவதை தடை செய்தமை, ஏனைய நேரங்களில் அணிய வேண்டும் என்பதைக் காட்டுகின்றது எனக் கருத்துக் கொள்வது தவரானதாகும். அப்படியாயின், ஆண்களுக்கு இஹ்ராமின்போது தலையை மறைக்க வேண்டாம் என வந்திருப்பது ஏனைய நேரங்களில் தலையை மறைக்க வேண்டும் என்பதைக் காட்டாது. தலைய விரும்பியவர் மறைக்கலாம், விரும்பியவர் திறக்கலாம்.
பெண்களின் முகம் , மற்றும் கைகள் என்பன அவசியம் மறைக்கப்பட வேண்டிய அவ்ரத் ஆக இருந்திருந்தால் அதனை மக்கள் மத்தியில் ஹஜ் சந்தர்ப்பத்தில் திறக்குமாறு நபி (ஸல்) அவர்கள் ஏவியிருக்க மாட்டார்கள்.
இன்னும், வியாபாரம், கொடுக்கல் வாங்கல் என்பவற்றின் போது முகத்தைத்திறப்பதற்கான தேவை இருக்கின்றது. (முக்னி, இப்னு குதாமா, 1/60).

6.
مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ﴿سورة النور: 31﴾
‘இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்”(ஸூறா அல் நூர்: 31)

இந்த வசனம் முகம் அவ்ரத் அல்ல என்பதையே காட்டுகின்றது, தமது முந்தானைகளால் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்றே வந்துள்ளது, முகத்தை மறைப்பது இஸ்லாமிய அடையாளங்களில் ஒன்றாக இருந்திருப்பின் முகங்களை மறைக்குமாறு தெளிவாக வந்திருக்க வேண்டும். அப்படி வந்தால் கண்ணும் மறைக்கப்படும், அது பற்றி இங்கு குறிப்பிடப்படவுமில்லை. ஆகவே முகத்தை மறைப்பதற்கும் இந்த வசனத்துக்கும் தொடர்பு எதுவும் இல்லை.
முகம் மறைக்கும் வழக்கம் ஜாஹிலிய்யக் காலத்திலும் இருந்து வந்த வழக்காகும், அதற்கு இபாதத் அந்தஸ்து வழங்கப்படக்கூடாது.

7. உம்மு கல்லாத் (றழி) அவர்கள் இறைதூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு போராட்டத்தில் கொல்லப்பட்ட தனது மகனைப்பற்றி வினவ முகத்திரை அணிந்து கொண்டு வந்தார்கள். அதற்கு சில நபித்தோழர்கள்: நீங்கள் நிகாப் (முகத்திரை) அணிந்த நிலையிலா உங்கள் மகன் பற்றி விசாரிக்க வந்திருக்கின்றீர்கள்? என (ஆச்சரியத்துடன்) வினவினார்கள்.
முகத்திரையையிட்டு ஸஹாபாக்களின் ஆச்சரியம் நிகாப் இபாதத்துடன் தொடர்பான ஒன்றல்ல என்பதைக் காட்டுகின்றது.

8. ஆயிஷா (றழி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: நாம் றஸூலுல்லாஹ்வுடன் இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையில் பயணிப்போர் எம்மைக் கடந்து செல்வார்கள், எமக்கு நேராக அவர்கள் வரும் போது எங்களில் ஒவ்வொருவரும் தமது தலையின் மேலிருந்து முகத்திரையை எடுத்து முகத்தை மறைப்பார்கள், அவர்கள் எம்மைக் கடந்து சென்று விட்டால் நாம் முகத்தைத் திறப்போம்”. (அஹ்மத்).
முகத்தை மறைப்பதற்கு ஆதாரமாக காட்டப்படும் இந்த ஹதீஸ், சட்டம் வகுப்பதற்கு தகுதியற்றளவு மிகவும் பலவீனமானது.

9. ஆயிஷா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அஸ்மா (றழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள், அவர்கள் மீது மென்மையான ஆடை இருந்தது. அப்போது இறைதூதர் (ஸல்) அவர்கள் தனது முகத்தைத் திருப்பிக் கொண்டு “அஸ்மாவே, பெண் பருவமடைந்து விட்டால் அவளிடமிருந்து இதனையும் இதனையும் தவிர (முகத்தையும் கையையும் சுட்டிக்காட்டினார்கள்) வேறு எதுவும் தென்படக் கூடாது” எனக் கூறினார்கள். (அபூதாவுத்).

இது பலவீனமான ஹதீஸ், எனினும் இது பற்றி வந்துள்ள இன்னும் பல ஹதீஸ்கள் இணைந்து இதனைப்பலப்படுத்துகின்றىش என அல்பானி (றஹ்) குறிப்பிடுகின்றார்கள்.

இன்னும் பல ஆதாரங்களை இக்கருத்தைப் பலப்படுத்த இமாம்கள் குறிப்பிடுகின்றனர்.
இக்கருத்துக்களில் முகம் மனிக்கட்டு என்பன அவ்ரத் அல்ல என்பதுவே ஆதாரத்தில் பலமானது என்பது தெளிவாக விளங்குகின்றது. ஆனால் முகத்தை மறைப்பவர்களும் ஒரு மார்க்க சட்ட அடிப்படையிலேயே அதனைச் செய்கின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய சட்டத்தில் இருக்கின்ற கருத்து முரண்பாடுகளை அணுகும் முறைமையை இங்கும் கடைப்பிடிப்பது அவசியமாகும், மாற்றுக்கருத்துக்கள் மதிக்கப்பட வேண்டும், தனது கருத்தே சரியானது என வாதிட்டு அடுத்தவர்களின் மீது திணிக்க முடியாது.
இமாம் மாலிகிடம் கலீபா அபூ ஜஹ்பர் அல் மன்ஸூர் மக்கள் அனைவரையும் முஅத்தாவை பின்பற்றுமாறு ஏவி அதனை அப்பாஸிய அரசின் அனைவருக்குமான் சட்டமாக ஆக்கப்போவதாக கூறிய போது இமாம் மாலிக் பின்வருமாறு கூறினார்கள்: நபித்தோழர்கள் கிளை விடயங்களில் கருத்து முரண்பட்டுள்ளனர், அவர்கள் பல நாடுகளிலும் வியாபித்துள்ளனர், அவர்களின் தெரிவுக்கே அவர்களை விட்டு விடுங்கள் என்று கூறி அக்கருத்தை மறுத்தார்கள்.

இத்தகைய முன்மாதிரிகள் எமது காலத்தின் தேவையாகும்..
இன்னும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பல்லின சமூகத்தில் நிகாப் பற்றிய இரண்டாவது கருத்தை ஏற்றுக் கொள்வது சமகால சமூகசூழலுக்கு பொருத்தமாக இருக்கின்றது. இமாம் ஷாபி ஈராக்கில் இருக்கும் போது வழங்கிய சட்டத்தீர்ப்பை எகிப்துக்கு வந்த போது மாற்றி புதிய தீர்ப்பை வழங்கியமைக்கு இதுவே காரணமாக அமைந்தது.

ஷாபி மத்ஹபில்
ஒரே பிரச்சினையில் பழைய தீர்ப்பு, புதிய தீர்ப்பு என இரு பத்வாக்கள் காணப்படுவது அம்மத்ஹபின் தனிப்பன்பாகும்.
சர்வதேச ரீதியில் இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் முகத்தை பெண்கள் மறைப்பது குற்றச்சாட்டுக்கு இன்னும் இடமளிப்பதாக அமையலாம்.
ஆகவே, கருத்து முரண்பாட்டின் போது பலமான ஆதாரங்கள் கொண்துடம், சமூக சூழலுக்கு பொருத்தமான கருத்தையே சட்ட அறிஞன் மேலானதாக தெரிவு செய்ய வேண்டும். அந்த வகையில் பெண்களின் முகம் மற்றும் மனிக்கட்டு வரையான கைகள் அவ்ரத் அல்ல, அவை மறைக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பது இக்காலத்தின் பத்வாவாக அமைய முடியும். அல்லாஹு அஃலம்.

Dr. எம். எம். நயீம்